பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க வேண்டும் என முதலமைச்சருக்குத்
தனியார் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே கொரேனா நோய் தொற்றின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல . கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியான கொரோனா கட்டுப்பாடுகளும், அதற்கான விதிகளும் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகின்றன.
கொரோனா முதல் அலையின் போது இந்தியாவில் மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகள் மற்றும், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை கொரோனா தொற்றை பொறுத்தே கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தொற்று குறைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனாலும் மழலையர் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. இது தொடர்பாக அவ்வப்போது தனியார்ப் பள்ளி நிர்வாகிகள் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் , சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தனியார் பள்ளி நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தமிழ்நாட்டில் உள்ள தனியார்ப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்ததாகத் தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு எல்கேஜி வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் இன்னும் பள்ளிக்கு வரவில்லை எனவும், மழலையர் வகுப்புகளை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகக் கூறிய கூறினார்.
மேலும் முதலமைச்சர் இது தொடர்பாகப் பரிசீலனை செய்வதாக பதிலளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.