கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் பெல் நிறுவன பொறியாளர்களை கொண்டு சின்னம் பொருத்தும் பணி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், பண்ருட்டி, வடலூர், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளிலும், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், குறிஞ்சிப்பாடி ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் இன்று (சனிக்கிழமை) சின்னம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
இதேபோல் சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கிள்ளை, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) யும், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கெங்கைகொண்டான், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் நாளை மறுநாளும் (திங்கட்கிழமை) சின்னம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. என்றார்.
அப்போது கடலூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பெல் நிறுவன பொறியாளர்கள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.