நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைப்பெற்றது, பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு, 74 ஆயிரத்து 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 14 ஆயிரத்து 701 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 23 ஆயிரத்து 354 பேரும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 36 ஆயிரத்து 361 பேரும் மனுதாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், வேட்ப்புமனுக்கள் மீதான பரிசீலனையும் நடந்து இறுதி பட்டியல் வெளியானது. இந்நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. வாகுப்பதிவுகள் ஒரு பிரச்சனையும் இன்றி நடைப்பெற வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் இன்று முதல் செயல்பட உள்ளன. ஒரு மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படைகள் என்ற அடிப்படையில் கூடுதலாக மேலும் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 45 பறக்கும் படைகளும் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து இலவச தொலைபேசி என் மூலம் பறக்கும் படை குழுக்களுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.