தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 12 ஆயிரத்து 607 பதவிகளுக்கு, 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நாலை வாக்குபதிவு தொடங்கப்படவுள்ளதால் அதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பூத் சிலிப் எனப்படும் வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த ஆவணங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்..
அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு அட்டைகள், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு உள்ளிட்டவை வாக்களிக்க தகுதியான ஆவணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் பதிவீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்டவற்றை காண்பித்தும் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.