மயிலாடுதுறை அருகே மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
கடந்த 12.11.2018 அன்று அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சேகர் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த டிரைவர் பிரகாசுக்கும், சேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், அருகில் இருந்த விறகு கட்டையால் சேகரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சேகர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ராம.சேயோன் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பிரகாசை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செசன்சு நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் முதல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.