தஞ்சையை அடுத்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமானது. உள்ளுர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளியூர் பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்த கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.மாசிமகத்தையொட்டி முத்து மாரியம்மன் கோவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் 16-வது ஆண்டாக 1008 பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பால் குட ஊர்வலம் கைலாச நாதர் கோவிலில் இருந்து தொடங்கியது. பால்குட ஊர்வலத்தை சுக்ரவார வழிபாட்டு குழு தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் 1008 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடையாற்றி விழா மாலையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் உற்சவ அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், பிரபு, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.