தஞ்சை மாநகராட்சி தேர்தலையொட்டி நேற்று முதல் மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்டம் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை மூடுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் இடங்களில் நேற்று முதல் நாளை வரை மதுக்கடைகள் மூடப்படுகிறது. தஞ்சை மாநகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன.
திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் குடிமகன்கள் தேர்தல் நடைபெறாத அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டு இருந்தால் குடிமகன்கள் அதிக அளவில் அங்கு படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அதிக அளவில் திரண்டு காணப்பட்டது. மதுவாங்க, குடிமகன்கள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தவாறு சென்றனர்.
இதனால் மதுவாங்கும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் மதுபானங்களை வாங்கி சென்றனர். சிலர் பெட்டி, பெட்டியாகவும் மதுபானங்களை வாங்கி சென்றனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளின் அருகே இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கிராமங்களில் திடீரென அதிக அளவு கூட்டம் காணப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.