தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநகராட்சிகளில் 1,370 வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 11,196 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சிகளில் 3,825 கவுன்சிலர் பதவிகளுக்கு 17,922 பேர் களம்காண்கின்றனர்.
பேரூராட்சிகளில் 7,412 கவுன்சிலர் பதவிகளுக்கு 28,660 பேர் போட்டியிடுகின்றனர். 12,607 பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநகராட்சிகளில் 4, நகராட்சிகளில் 18, பேரூராட்சிகளில் 196 கவுன்சிலர்கள் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் 1 லட்சத்து 33 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.