விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய காலனியைச் சேர்ந்தவர் வினோத் – சசிகலா தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வரோகா (4), விஜய ஸ்ரீ (3 மாதம்) ஆகிய குழந்தைகள் இருந்தனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், 2018-ம் ஆண்டு விஜய ஸ்ரீ பிறந்தது முதலே சசிகலாவுக்கு எது சாப்பிட்டாலும் தொடர் வாந்தி பிரச்சனைக் காரணமாக பல்வேறு இடங்களில் சிகிச்சைப் பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த சசிகலா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். பின்னர், தான் தற்கொலை செய்து கொண்டால் தனது குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணி, குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த 23-4-2018 அன்று இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தவர், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து அவரது மாமியார் விஜயா அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பை வாசித்த கடலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், குழந்தைகளைக் கொன்ற குற்றத்திற்காக தாய் சசிகலாவிற்கு ஒரு கொலைக்கு ஒரு ஆயுள் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.