வாக்குசாவடிக்குள் வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாபை அகற்றச் சொன்ன பூத் ஏஜெண்ட் வாக்கு சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8 வது வார்டு அல் அமீன் பள்ளியில் வாக்களிப்பதற்காக வந்த இஸ்லாமிய மதத்தினை சேர்ந்த பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொல்லிய பாஜக கட்சியின் பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியதாக சொல்லப்பட்டது.
வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாப்பை அகற்ற சொன்னதால் திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறபடுத்தியதை அடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. அவ்வப்போது அப்பகுதியில் சம்பவம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.