இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளி வாக்குச்சாவடியில், அறை எண் 240-ல் காலை 11 மணி நிலவரப்படி 216 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 1 மணி நேரம் கழித்து சோதித்ததில் 2,177 வாக்குகள் பதிவானதாக வாக்குப்பதிவு எந்திரத்தில் காட்டியது. அந்த வாட்டில் மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து இயந்திர பழுதை சுட்டிக்காட்டி அதிமுக, திமுக என இரண்டு கட்சி வேட்பாளர்களும் வாக்குச் சாவடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து இரண்டு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் சாந்தகுமார், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டில் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 13 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவித்திருந்தார். திடிரென வாக்கு இயந்திரத்தில் அதிகபடியான வாக்குகள் காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்.
வாக்குபதிவு முடிந்த பின்னர் முதலில் கோளாறான வாக்கு இயந்திரத்தில் இருந்து வாக்கு சீட்டுகளை எண்ண வேண்டும் என்று 12 வேட்பாளர்கள் ஒப்புகொண்ட நிலையில் திமுக வேட்பாளர் மட்டும் எண்ணிகைக்கு ஒத்துகொள்ளாத்து சந்தேகபடும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மதிய வேலை முதல் வாக்கு பதிவுகள் சீராக நடைபெறுவதற்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர் இளங்கோவன் இயந்திர கோளாரே இதற்கு காரணம் என்று தெரிவித்தார். உடனடியாக புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் சரி பார்க்கபட்ட பின் மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது. இதனால் வாக்குப்பதிவு மையத்தில் 3 மணி நேரம் வாக்களிக்க இயலாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது எனவும் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் மரணமடைந்த காரணத்தால் ஆறு இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை என குறிப்பிட்ட பழனிகுமார், வாக்குச்சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என கூறினார்.