0 0
Read Time:7 Minute, 18 Second

சென்னை: தமிழ்நாட்டில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, ேகாவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. 12,870 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 57,746 பேர் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் 55,337 கட்டுப்பாட்டு இயந்திரம், 1,06,121 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஒரு வார்டில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

தேர்தல் பணியில் 1.32 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை செலுத்தினர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் வகையிலும் 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 30,745 வாக்குச்சாவடி மையங்களில் 25,735 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. 5,000 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

வாக்குச்சாவடிக்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அங்கேயே முககவசம் வழங்கப்பட்டது. ஓரிரு இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இவை உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி வரை சென்னை தவிர அனைத்து மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சென்னையில் மட்டும் காலை முதல் மாலை வரை மிகவும் மந்தமான வாக்குப்பதிவு நடந்தது. இறுதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 60.70% வாக்குகள் பதிவானது. பேரூராட்சியில் 74.68 சதவீதம், நகராட்சியில் 68.22 சதவீதம், மாநகராட்சியில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேநேரம் சென்னையில் 43.59 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு விடிய விடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு ஒரு அறையில் அடுக்கி வைத்து அந்த அறைக்கு முகவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார், அதற்கடுத்து 2வதாக வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் சட்டம், ஒழுங்கு போலீசார், 3வதாக வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மையங்களின் உள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளைமறுநாள்(22ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 9 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.

இந்நிலையில் இந்த நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அறிக்கையில், சென்னையில் 2, மதுரையில் 1, அரியலூரில் 2, திருவண்ணாமலையில் 2 என 7 வாக்குச்சாவடிகளில் நாளை (21.02.2022) மறுவாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுவாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரம், அதாவது, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %