வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி முழு தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி சாதனை படைத்தது. தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது.
இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 35 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த 9-வது வெற்றி இதுவாகும். முன்னதாக ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.