மயிலாடுதுறை: உள்ளாட்சி தேர்தலில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதமும், மயிலாடுதுறை நகராட்சியில் குறைந்தபட்சமாக 62.61 சதவீதமும் வாக்குப்பதிவானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகளுக்கும், குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 19-வது வார்டு அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அன்னதாட்சி என்பவர் உயிரிழந்ததால் அந்த வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து 35 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
இந்த 35 வார்டுகளில் 70 ஆயிரத்து 72 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 33 ஆயிரத்து 957 பேரும், பெண் வாக்காளர்கள் 36 ஆயிரத்து 104 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் வாக்காளர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். பின்னர் படிப்படியாக வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சியில் பதிவான வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 36 பேரும், பெண் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 835 பேரும் என்று மொத்தம் 43 ஆயிரத்து 871 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்கு சதவீதம் 62.61 மட்டுமே ஆகும்.
மாவட்டத்திலேயே மயிலாடுதுறை நகராட்சியில் தான் குறைந்தப்பட்சமாக 62.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 78.91 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.