தமிழகத்தில் மொத்தம் 5300 டாஸ்மாக் மதுகடைகள் செயல்படுகின்றன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் அதாவது சுமார் 1700 கடைகளை நாளை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் 4 நாட்களுக்கு மூடப்படுகிறது. ஓட்டுபதிவுக்கு முந்தைய மூன்று நாட்களும் கடைகள் அடைக்கப்பட்டன. கடந்த 17-ந் தேதி முதல் ஓட்டுப்பதிவு நடைபெற்ற 19-ந் தேதி வரை 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடிய பகுதிகளில் உள்ள கடைகளை மட்டும் மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் கடந்த 16-ந் தேதி இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. அதன் பின்னர் நேற்று திறக்கப்பட்டது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாளை மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 268 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் 15 இடங்களில் நடக்கிறது. அதனால் அந்த பகுதிகளில் இன்று இரவு 10 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும். நாளை மீண்டும் மதுக்கடைகள் மூடப்படுவதால் மது பிரியர்கள் ஒரு சிலர் ஆர்வமாக வாங்கி இன்று இருப்பு வைத்துக் கொண்டனர்.