சென்னை; அரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தற்போது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கும் கொரோனா பாதிப்பு விரைவில் பூஜ்ஜியம் என்ற இலக்கை அடையும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 92 சதவிகிதம் பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளதாகவும், விரைவில் குஜராத்தைப் போல 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தலுக்காக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன அமைச்சர் ,தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகள் குறைத்துக் காட்டவில்லை என்றும், அப்படி காட்ட முடியாது என தெரிவித்த அவர் ,கிண்டி கிங் மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளில் 20 பேர் தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதை யார் வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனையில் தேங்கியிருக்கும் தடுப்பூசிகளை காலாவதியாவதற்குள் பயன்படுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.