கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமாக அறிவிக்கப்பட்ட 14 இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா். அந்த வளாகத்தின் உள்ளே ஆயுதப் படைக் காவலா்களும், வளாகத்தின் வெளிப்புற பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீஸாரும் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 1,500 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.