தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குகள் எண்ணப்பட்டன.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 200 வார்டுகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு 15 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் மையங்களில் காவலர் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையும் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர், முகவர்கள் என அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.