உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான க்யுவ் போரிஸ்பீல் விமான நிலையத்துக்கு முதல் விமானம் இன்று காலை 7:40 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டது.
மேற்குலக நாடுகள், உக்ரைன்மீது போர் தொடுக்கும் ரஷ்யாவின் முடிவைத் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். அதிகரித்து வரும் பதற்ற சூழலில் உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களுக்கான தளர்வுகளை இந்தியா அனுமதித்தது. அறிவிப்பு வெளியான போது டாடா குழுமத்தின் அங்கமாக இணைந்துள்ள ஏர் இந்தியா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதாக பிப்ரவரி 18 அறிவித்தது. உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான க்யுவ் போரிஸ்பீல் விமான நிலையத்துக்கு முதல் விமானம் இன்று காலை 7:40 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. 200க்கும் அதிகமான பயணிகளுக்கான இருக்கைகளைக் கொண்டுள்ள ட்ரீம்லைனர் பி-787 வகை விமானம் AI-1947 இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
எட்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தில் அங்கு செல்லும் இந்த விமானம் இரவு டெல்லிக்கு திரும்பும். இந்தியர்கள் நாடு திரும்பும் வகையில் இன்னும் இரண்டு விமானங்கள் பிப்ரவரி 24, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன. இந்தியர்களின் நலன் முக்கியமென தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது இந்தியா. ரஷ்யா- மேற்குலக பிரச்சனையில் இந்தியா சாய்வுகளின்றி சமநிலையாக கையாண்டு வருகிறது. மாணவர்கள் உட்பட 20000 க்கும் அதிகமான இந்தியாவை சேர்ந்த மக்கள் உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இந்த விவகாரத்தில் நீடித்த மற்றும் அமைதியான உடன்பாடுகள் மூலம் மட்டுமே அதிகரித்துவரும் பதற்ற சூழலைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.