கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்றும், வகுப்பறைக்குள் மட்டும ஹிஜாப் அணியக்கூடாது என்றும் கர்நாடகா அரசு தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின்; உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், இஸ்லாமிய மாணவிகளுக்குப் போட்டியாக இந்து மாணவர்களும், மாணவிகளும் காவித் துண்டு அணிந்து பள்ளிக்கு வர முயன்றனர்.
இந்த விவகாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியதை அடுத்து, இரு தரப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகல்கோட், தவனகிரி, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அம்மநிலத்தில் 144 தடைகளும் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாகும் நிலையில், இது குறித்த விசாரணைகள் நடைப்பெற்று வருகிறது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது கர்நாடகா அரசு வழக்கறிஞர் முன் வைத்த வாதத்தில், கல்வி நிறுவனங்களின் வளாகங்களுக்குள் ஹிஜாப் அணிய எந்தவித தடையும் இல்லை என்று கூறினார்.
வகுப்பறைக்குள் மட்டுமே ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கர்நாடகா கல்வி நிறுவனங்கள் வகைப்பாடு மற்றும் பதிவு விதிகள் சட்டத்தில் விதி 11-ல் குறிப்பிட்ட தலைகவசத்தை அணிவது குறித்து உரிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். ஹிஜாப் அணியலாமா, வேண்டாமா என்ற முடிவை சம்பந்தப்பட்ட பெண்களிடம் விட்டு விட வேண்டும் என்றும் கர்நாடகா அரசு வழக்கறிஞர் கூறினார்.