0 0
Read Time:4 Minute, 48 Second

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மகத்தான என்பதை விட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது என தெரிவித்த அவர், இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் என அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அயராத உழைப்பாலும் பணியாலும்தான் இந்தச் சிறப்புமிகு வெற்றி சாத்தியமானது என தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாக இருந்தாலும் கூட்டணியினரின் ஒற்றுமை என்பது தேர்தல் உறவாக மட்டும் இல்லாமல், கொள்கை உறவாகவும், அதனையும் உள்ளடக்கிய பாச உணர்வாகவும் மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து வருவதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் நம்முடைய அணி தொடர் வெற்றியைப் பெறுவதற்குக் காரணம் இந்த ஒற்றுமை உணர்வுதான் என குறிப்பிட்ட அவர், ‘நான்’ என்று சொல்லுவதை விட ‘நாம்’ என்று சொல்வதே நன்மை பயக்கும். அதனால்தான், இது எனது அரசு என்று சொல்லாமல், ‘நமது அரசு’ என்று சொல்லி வருகிறேன். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஓர் இனத்தின் அரசாக இருக்கும் என்பதை முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் சொல்லி வருகிறேன் என தெரிவித்தார்.

மேலும், வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் அரசாக இருக்கும் என்றும், அனைத்து மக்களின் அரசாக இருக்கும் என்றும் சொல்லி வருகிறேன். அப்படித்தான் இந்த ஒன்பது மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த அவர், அத்தகைய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என கூறியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகளை முழுமையாக மக்கள் நிராகரித்துள்ளார்கள்; அவர்களது வாதங்களையும் நிராகரித்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு எனவும், வெற்றி பெற்றவர்கள் அதனைச் சிறப்பாகச் செய்வார்கள். அதனை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவர்கள் அனைவரும் பணியாற்றுவார்கள் எனவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘திராவிட மாடல்’ ஆட்சியை முன்னிலும் திறம்படக் கொண்டு செலுத்த ஊக்கமளித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %