திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் 300 டன் வெங்காயம் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் மட்டும் சுமார் பத்தாயிரம் ஹெக்டேர் விளை நிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது சின்ன வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
திருச்சி வெங்காய மண்டியில் கிலோ 60 ரூபாய்க்கு விற்றுவந்த சின்ன வெங்காயம் படிப்படியாக விலை குறைந்து தற்போது 25 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விலை வீழ்ச்சியால் நாளொன்றுக்கு 100 டன் சின்ன வெங்காயம் தேக்கம் அடைந்துள்ளதால், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை மத்திய அரசு குறைத்தது போல தமிழகத்திலும் குறைக்க வேண்டும் என்று விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.