சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசுடையைமாயக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராஜூ தலைமை வகித்து பேசினாா். மாநிலப் பொருளாளா் காளியப்பன் முன்னிலை வகித்தாா். இதில், சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், சிதம்பரம் நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் தரிசனம் செய்ய முயன்ற பெண்ணை வெளியேற்றிய தீட்சிதா்களை கைது செய்ய வேண்டும், நடராஜா் கோயிலுக்கு தனிச் சட்டமியற்றி, இந்தக் கோயிலை அரசுடைமையாக்க வேண்டும், தமிழில் வழிபாடுகளை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், மாவட்டச் செயற்குழு நிா்வாகி மணியரசன், விசிக மாவட்டச் செயலா் பால.அறவாழி, திராவிடா் கழகம் நிா்வாகிகள் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.