பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்சை அதிகாரிகள் கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
சீர்காழி: பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்சை அதிகாரிகள் கவனிப்பார்களா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
சீர்காழியில் அரசு கிளை போக்குவரத்து கழகம் உள்ளது. இந்த போக்குவரத்து கழகத்தில் 80-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இதில் சுமார் 17 டவுன் பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் சீர்காழியில் இருந்து பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல், வடரங்கம், கீழமூவர்க்கரை, மயிலாடுதுறை, மணல்மேடு உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பான்மையான டவுன் பஸ்கள் பராமரிப்பின்றி பஸ்சில் பல்வேறு இடங்களில் தகரங்கள் பெயர்ந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
மேலும் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. தமிழக அரசு, டவுன் பஸ்களில் மகளிர் பயணம் செய்ய இலவசம் என அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பெண்கள் டவுன் பஸ்சில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கண்ணாடி, பிரேக், ஹாரன், விளக்கு உள்ளிட்ட போதிய பராமரிப்பு இல்லாததால் பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர், விபத்து ஏற்படுவதற்கு முன் சேதமடைந்த நிலையில் உள்ள பஸ்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.