திருப்பத்தூர் அருகே கழிவறை இன்றி பள்ளி சிறார் சிறுமிகள் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றதால் விபத்துக்குள்ளாகி சிறுமியின் கால் முறிந்துள்ளது.
திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் காளியம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி கழிவறையில் நீண்ட காலமாக தண்ணீர் இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிக்க சாலையை கடந்து வெளியே வந்த சிறுமி விபத்துக்குள்ளாகி கால் முறிந்ததால் பெற்றோர்கள் பதட்டமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் காளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் கல்வித்தரம் சிறப்பாக இருந்தாலும் 2016-17ம் நிதியாண்டில் 1,96,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கழிவறை சுகாதாரமின்றி தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதால் பள்ளியின் இடைவேளை நேரங்களில் சிறுவர் சிறுமிகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக பள்ளியின் ஓரமாக உள்ள சாலையை கடந்து இயற்கை உபாதைகளை கழித்து வந்துள்ளனர்.
வழக்கம் போல இன்றும் பள்ளியின் இடைவேளையில் இயற்கை உபாதையை கழிக்க சிறுவர் சிறுமியர்கள் வெளியே வந்த பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயின்று வரும் கணபதி மகாலட்சுமி தம்பதியரின் மகள் திவ்யா ஸ்ரீ மீது மோதியதால் கால்கள் முறிவு ஏற்பட்டு வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இது சம்பந்தமாக பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள். இன்று விபத்து ஏற்பட்டு சிறுமிக்கு கால் முறிவு ஏற்பட்டது போல் நாளை ஒரு பிஞ்சு உயிர் போவதற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குழந்தைகளை விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.