பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15 பேர் பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் காலை அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி ஆசிரியர் தமிழ்வேந்தன், அந்த மாணவனை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது.
இதுபற்றி மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து மாணவனின் தந்தையான ஆட்டோ டிரைவர் சரவணன்(வயது 36) பள்ளிக்கு சென்று ஆசிாியர் தமிழ்வேந்தனை ஆபாசமாக திட்டி, தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த சக ஆசிரியர்கள் பள்ளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
உடனே தலைமை ஆசிரியர் ராணி, பயிற்சி ஆசிரியர்களை கொண்டு வகுப்பு களை நடத்த முயற்சி மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பிரகாஷ், பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.