சீர்காழி அருகே மங்கை மடத்தில் வசிக்கும் வெங்கடேசன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தனக்கு சொந்தமான வயல்களில் இயற்கையான முறைகளில் பாரம்பரிய நெல் ரகங்களைகொண்டு சாகுபடி செய்து இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு மருத்துவ குணம் கொண்ட ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாயி வெங்கடேசன் கூறுகையில்,தொடர்ந்து நான் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய நெல் ரகங்களை வாங்கிவந்து சாகுபடி செய்து வருகிறேன்.
இந்த ஆண்டு நம் முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்திய ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் ரகம் இயற்கை முறையில் சாகுபடி செய்து அறுவடை பணியை தொடங்கியுள்ளேன். ஆத்தூர் கிச்சிலி சம்பா மருத்துவ குணம் கொண்டது.எளிதாக செரிமானம் ஆகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை வலுவாக்கும் தசைகள் மற்றும் தோலில் பளபளப்பு உண்டாகிறது. சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
இதனை கொண்டு பிரியாணி, இனிப்பு வகைகள், சாத வகைகள் மற்றும் கொழுகாட்டை செய்ய பயன்படுகின்றது. அனைத்து விவசாயிகளும் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.