0 0
Read Time:4 Minute, 45 Second

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா, போரை தொடங்கியது.

முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து இந்த ஆக்ரோ‌ஷ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

2-வது நாளில் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷிய வீரர்கள் முன்னேறினர். அந்த நகரை சுற்றிவளைக்க ராணுவ டேங்கிகள் மூலம் முன்னேறி சென்றனர். குறிப்பாக பெலாரஸ் நாட்டின் எல்லையில் இருந்து உக்ரைனுக்குள் ரஷிய படை புகுந்தது. அதே போல் மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டன.

உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோ‌ஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அண்டை நாடுகளின் எல்லையை நோக்கி செல்கிறார்கள். அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது.

இதுவரை உக்ரைனில் இருந்து 1.20 லட்சம் பேர் அகதிகளாக போலந்து, ருமேனியா, அங்கேரி, மால்டோவா, சுலோவாகியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. சண்டை மேலும் வலுவடைந்தால் 40 லட்சம் பேர் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

தலைநகர் கீவ்வில் சண்டை நடந்து வருவதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணி வரை இருந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் பொது மக்கள் எதிரிகளின் நாசவேலை மற்றும் உளவு பிரிவை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். எங்கள் நாட்டை காப்போம். நான் தொடர்ந்து இங்குதான் இருப்பேன். நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, ‘‘தலைநகரை உக்ரைன் ராணுவத்தினர் காக்க போரிட்டு வருகிறார்கள். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இன்னமும் இருக்கிறது. எதிரிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன’’ என்று தெரிவித்தார்.

ரஷிய படையின் அதிரடி தாக்குதலால் தலைநகர் கீவ் விரைவில் வீழும் என்று கருதப்பட்ட நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கடுமையாக எதிர்த்து போரிட்டனர். இதனால் ரஷிய படை கடும் சவாலை சந்தித்தது. நேற்று 3-வது நாளில் ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்தது.

Source:மாலைமலர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %