கொள்ளிடத்தில் வாகன நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டார கிளை கூட்டம் கொள்ளிடத்தில் நடந்தது. வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார துணை தலைவர் நாகராஜன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் திருஞானம் வேலை அறிக்கையையும் வட்டார பொருளாளர் ரமேஷ் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர்.
மாவட்ட தலைவர் நல்லமுத்து, மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை தலைவர் சிங்காரவேலு, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி ஓய்வில் செல்வதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.
கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளை உள்ளடக்கிய கொள்ளிடம் வட்டாரத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாசில்தார் அலுவலகத்தை கொள்ளிடத்தில் அமைத்திட வேண்டும். கொள்ளிடம் ெரயில்வே கேட் மூடும்போது வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
26 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சியில் பணிபுரிகின்ற ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக மாற்ற வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மதிப்பீட்டு அளவை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில செயலாளர் சவுந்தர பாண்டியன் நன்றி கூறினார்.