ஏர் இந்தியாவை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், ஹங்கேரியில் உள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை அனுப்புகிறது.
போர் மூண்டுள்ள உக்ரைனில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சவாளிகள் சிக்கி தவிக்கும் நிலையில், அங்கிருந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கின்றனர்.
இதனிடையே இந்தியர்களை மீட்க தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, ஆபரஷேன் கங்கா திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்களை உக்ரைன் எல்லைகளுக்கு அனுப்பி மக்களை மீட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த மீட்பு பணிக்கு வலு சேர்க்கும் விதமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் சிறப்பு விமானங்களை இயக்க திட்டமிட்டு, அதுதொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியிலிருந்து ஹங்கேரி நோக்கி புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் நாளை சார்ட்டர் விமானம் ஒன்று ஹங்கேரியிலிருந்து ஜார்ஜியா தலைநகர் நோக்கி இந்தியர்களுடன் இயக்கப்பட உள்ளது. ஏர் இந்தியா, விமானத்தை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், இந்தியர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.