சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் வக்கீல் சம்பந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் நடராஜன், பொருளாளர் பா. பழனி, உறுப்பினர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வக்கீல் சம்பந்தம் கூறுகையில், இந்த ஆண்டு 41-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற மார்ச் 1-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. விழாவானது கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறகைளை பின்பற்றி நடைபெறும்.
மேலும், முதல்நாள் மாலை 6.15 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பத்மபூஷன் விருது பெற்ற தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்கள். மற்ற நாட்களிலும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்.
இதில், பரதம், நாடகம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி, ஒடிசி, மோகினி நடனம் உள்ளிட்ட பல்வேறு நாட்டியங்களை, ஏராளமான நாட்டிய கலைஞர்கள் நடனம் ஆட இருக்கிறார்கள்.
விழாவின் இறுதிநாளான சனிக்கிழமை அன்று, சுந்தரம் பெற்று முடிந்து இந்த ஆண்டு 75 ஆவது ஆண்டு சுதந்திர தின ஆண்டு விழாவை முன்னிட்டு, சுந்தர போராட்ட வீரர்களின் சரித்திரத்தை விளக்குகின்ற, “வீரம் விளைஞ்ச பூமி” என்ற நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.
முன்னதாக நடராஜர் கோவிலில் , பொது தீட்சிதர்கள் சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு அந்த விழா ரத்து செய்யப்படுவதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.