சிதம்பரம்; மகா சிவராத்திரியான நேற்று சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது.
அதன்படி மாலை 6.15 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து 6.30 மணிக்கு மைசூரை சேர்ந்த அனுஷா ராஜ், பரத நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு சென்னையை சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகளின் அருட்பெருஞ்ஜோதி என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர்கள் நடராஜன், ராமநாதன், செயலாளர் சம்பந்தம், பொருளாளர் பழனி, இணை செயலாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பத்ம பூஷன் விருது பெற்ற தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினர். அதைத் தொடர்ந்து முன்னாள் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர், மத்திய தொல்லியல் துறை இயக்குனருமான நாகசாமி என்பவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து ஐதராபாத்தை சேர்ந்த மாணவிகள் குச்சிபுடி நடனம், இத்தாலியை சேர்ந்த லூக் ரேசியா மணிஸ்காட் பரதநாட்டியம், கதக், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.
தொடர்ந்து வருகிற 5-ந் தேதி வரைக்கும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.