0 0
Read Time:3 Minute, 29 Second

திருக்காட்டுப்பள்ளி, பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு தொடர்பாக மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளி விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் 2-வது முறையாக விசாரணை நடத்தினர்.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்த அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம கிராமத்தை சேர்ந்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி தன்னை விடுதியில் தூய்மை பணிகள் செய்ய கூறியதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் விஷம் குடித்ததாக மாணவி கூறியிருந்தார்.

அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.
இதற்கிடையே மாணவியின் தந்தை முருகானந்தம் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அல்லது வேறு அமைப்புக்கு மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் சி.பி.ஐ. துணை இயக்குநர் வித்யாகுல்கர்னி தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் 21-ந் தேதி மைக்கேல்பட்டி பள்ளி விடுதியில் விசாரணை நடத்தினர்.

நேற்று 2-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தோஷ்குமார், சுமதி ஆகியோர் மைக்கேல்பட்டிக்கு வந்து பள்ளி விடுதியில் விசாரணை நடத்தினர். விடுதி பணியாளர்கள், விடுதி பதிவேடுகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட லாவண்யா விடுதியில் சேர்ந்தது முதல் வருகை பதிவேடு, விடுதி கட்டணம், கட்டணம் செலுத்திய விவரம் உள்ளிட்ட விவரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் விடுதிக்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்தனர்.

இந்த விசாரணையின் போது பள்ளி விடுதிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று மதியம் 2 மணிக்கு விடுதிக்குள் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், விசாரணையை முடித்துக்கொண்டு இரவு 7.45 மணிக்கு வெளியே வந்தனர்.

பள்ளி விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %