அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 2.25 கோடி மோசடி செய்த கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 94 கரியமாணிக்கம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்தவர் செல்வராஜ் வயது 52. இவர் இதே பகுதியை சேர்ந்தவராவார். இவர் இந்த கிராமத்தில் உள்ள ஒன்பது நபர்களிடம் அரசுப்பள்ளிகளில் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை, பொதுப்பணித் துறையில் வேலை, வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை என அரசு அலுவலகங்களில் படிப்பிற்கு ஏற்றார்போல அரசு வேலை வாங்கித் தருவதாக தலா ரூபாய் 5 லட்சம் வீதம் 45 நபர்களிடம் ரூ. 2.25 கோடி ரூபாய் கடந்த ஒரு வருடமாக பணம் பெற்று வந்துள்ளனர்.
இந்த கிராம நிர்வாக உதவியாளர் செல்வராஜூடன் துறையூர் பகுதியை சேர்ந்த பிரசன்னா இவரது தம்பி சந்துரு ஆகியோரும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுத்த நபர்களுக்கு வேலை கிடைக்காததால் பணத்தை திருப்பி கேட்டு பணம் கொடுத்தவர்கள் சந்துரு மற்றும் இவரது அண்ணன் பிரசன்னா கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் செல்வராஜ் ஆகியோரிடம் தொந்தரவு செய்துள்ளனர்.
நீண்ட நாட்களாகியும் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காத நிலையிலும் வேலையும் கிடைக்காத நிலையிலும் பணத்தை கொடுத்த நபர்கள் துறையூர் காவல் நிலையத்தில் சந்துரு , பிரசன்னா ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சந்துரு கடந்த ஜனவரி மாதம் விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டார் . இதனால் பணம் கொடுத்தவர்கள் தாங்கள் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்டோமோ என அஞ்சி செல்வராஜ் மற்றும் பிரசன்னா ஆகியோர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புகார் தொடர்பாக சிறுகனூர் போலீசார் எவ்வித விசாரணையும் நடத்தாத நிலையில் செல்வராஜ் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் செல்வராஜிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். பணம் கொடுத்தவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.