உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த இடத்தில் தான் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின்நிலையமான சபோரிஷியா அணுமின்நிலையம் உள்ளது. இந்த அணுமின்நிலையத்தில் நாட்டின் 15 உலைகளில் ஆறு உலைகள் உள்ளன. 1986-ம் ஆண்டு உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல் தெரிவித்துள்ளார். ரஷியாவின் தாக்குதலில் அணுமின் நிலையம் தீப்பிடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை நான்கு புறமும் சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
சபோரிஷியா அணுமின் நிலையம் வெடித்தால், அது செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் குலேபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.