0 0
Read Time:2 Minute, 52 Second

பொறையாறு: செம்பனார்கோவில் அருகே அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற அங்காளபரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியின் மறுநாள் மாலை மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மகாசிவராத்திரியின் மறுநாளான நேற்று முன்தினம் மாலை மயானக்கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

பின்னர் அங்காளம்மன் புறப்பாடு செய்யப்பட்டு மயானத்தை (சுடுகாட்டை) அடைந்தது. மயானக் கொள்ளையில் பக்தர்கள் வேண்டுதலாக விரதம் இருந்து காணிக்கையாக கொண்டு வந்த கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் குவியலாக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டிய பிறகு பக்தர்கள் பேச்சாயி வேடம் அணிந்து கிழங்கு மற்றும் நவதானியத்தை கொள்ளை அடித்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த கிழங்கை பக்தர்கள் சாப்பிடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் சென்று விழாவில் கலந்து கொண்டு கிழங்கு வகைகளை எடுத்து சென்றனர். இதையடுத்து கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர்.

இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் பெரும் கூட்டமாக காணப்பட்டது. இதனால் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %