நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலியானார். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கடலூர், குண்டுசாலையை சேர்ந்தவர் பிரபு(வயது 42). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை இவர் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு, அங்குள்ள ராமுதெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டின் முன்பக்க படிக்கட்டு மீது இடித்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அலறினார்கள். வேன் டிரைவர் பிரபு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இந்த விபத்தை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து வேனில் சிக்கி தவித்த மாணவர்களை மீட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். இதையடுத்து படுகாயமடைந்த பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.