போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 9 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இதனால் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அவர்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை மீட்க சிறப்பு பேருந்துகளை ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது.
உக்ரைனின் கார்கிவ், சுமி ஆகிய மாகாணங்களில் இருந்து ரஷ்யாவின் பெல்கோரேட் பகுதிக்கு செல்ல 130 பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களை ரஷ்ய நகருக்கு அழைத்து வரும் வழியில் ஆங்காங்கே தற்காலிக தங்குமிடங்கள், உணவு, குடிநீர், தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.