சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட, பிரியா ராஜன் பதவியேற்று கொண்டார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவியேற்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக பிரியா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னை மேயராக பிரியா ராஜன் ஒருமனதாக தேர்வானார். இதனை தொடர்ந்து, அவருக்கு சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
பின்பு, ஆணையர் வழங்கிய மேயருக்கான அங்கியணிந்து இருக்கையில் அமர்ந்த பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோர் செங்கோலை வழங்கினர். மிகவும் இளம்வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரியா ராஜன், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பட்டியலினத்தைச் சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மேயராக பதவி ஏற்றதில் பெருமையடைவதாக கூறினார். மேலும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை சவாலாக எடுத்துக்கொண்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பிரியா செயல்படுவார் என குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி வரலாற்றில் 102 பெண்கள் மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளதாக தெரிவித்தார். 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகளவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை மேயராக பதவியேற்றுள்ள பிரியாவுக்கு வாழ்த்து கூறினார்.
மேயராக பொறுப்பு உள்ள பிரியா, முதலமைச்சரின் வழியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் சென்னை மாநகராட்சியை மாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.