ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மண்டல தலைமையகங்களில் 24 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போதவாக சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை விளக்கியும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தியும் திருவாரூரில் சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளை செயலாளர் செங்குட்டுவன், மத்திய சங்க துணைத்தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டக்குழு உறுப்பினர் அம்பேத்கர், நிர்வாகிகள் செந்தில், பாலமுரளி, ராஜேஷ், கண்ணன், சோமு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.