பொறையாறு: தரங்கம்பாடி பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளரும், 4-வது மற்றும் 5 -வது வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 15 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 22-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தி.மு.க. 13 வார்டுகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.
அதனைத் தொடர்ந்து கடந்த 2-ந்தேதி தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி கூட்ட அரங்கில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை மற்றும் மாலை நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் சுகுணசங்கரி வேட்புமனு தாக்கல் செய்தார். திடீரென அ.தி.மு.க. சார்பில் ஆனந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் பரபரப்பு சூழ்நிலை உருவானது. வாக்கு பெட்டி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் இரண்டு பேரின் வேட்புமனுவை பரிசீலனை செய்தார். அப்போது ஆனந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் யாரும் வழி மொழியாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து போட்டியின்றி தி.மு.க.வேட்பாளர் சுகுணசங்கரி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்.
இதேபோல் மாலையில் நடந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த பொன் ராஜேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பொன் ராஜேந்திரன் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் அறிவித்தார். தலைவர் மற்றும் துணைத் தலைவர் வெற்றி பெற்று தரங்கம்பாடி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.