0 0
Read Time:5 Minute, 58 Second

பேச்சுவார்த்தை நடத்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வந்தபோது அவரது காரை தாக்கிய வி.சி.க.வினரை போலீசார் தடியால் அடித்தனர். பதிலுக்கு அவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர்.

நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் விரக்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு துணை தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணனின் மனைவியும், 3-வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரபாவும், அவரை எதிர்த்து ஏற்கனவே தலைவர் பதவியில் போட்டியிட்டு தோல்வி கண்ட கிரிஜா திருமாறன் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த ஜெயபிரபா வெற்றி பெற்றார். இதனால் வி.சி.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நெய்வேலி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர், தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோரை தனியாக அழைத்து பேசினார்.

சிறிது நேரத்தில் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மட்டும் வெளியே வந்தார். தொடர்ந்து துணை தலைவரிடம் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பதவியை கொடுக்க வேண்டும், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்போது ஜெயபிரபா மணிவண்ணன், கண்ணீர் விட்டு கதறியபடி, மயங்கி விழுந்தார். உடனே சக பெண் கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து அவரை வெளியே தூக்கி வந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டது.

ஆனால், போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர், நகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்து, ஜெயபிரபா மணிவண்ணனை பரிசோதனை செய்தார். அதில் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு பெண் கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜெயபிரபா மணிவண்ணனை தூக்கி சென்றனர்.
ஆம்புலன்சுக்கு அருகே சென்ற போது, அவரை அதில் ஏற்றவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர்.

இதனால் அங்கிருந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அவரை போலீசார் உதவியுடன் ஆம்புலன்சில் ஏற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, நகராட்சி அலுவலகத்தில் இருந்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளுடன் வெளியே வந்தார். போராட்டக்காரர்கள் அவரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் தலையிட்டு அவரை மீட்டு காரில் ஏற செய்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து கைகளால் காரை தாக்கினர்.

இதனால் போலீசார் வேறு வழியின்றி தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, நகர பகுதி முழுவதும் ரோந்து சென்று ஆங்காங்கே கூடியிருந்தவர்களை விரட்டி அடித்து, நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே மறைமுக தேர்தலில் பங்கேற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, நெல்லிக்குப்பத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் போராட்டக்களமாகவே இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %