செம்பனார்கோவில் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மணக்குடி கீழிருப்பு கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி 21-ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது.
இதையொட்டி கிணற்றடி காவிரி ஆற்றங்கரையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தின் போது மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன், கரகம் மற்றும் அலகு காவடி, பால் காவடி எடுத்து வந்தனர். பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் பிரகாரத்தில் பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். பூஜைகளை அர்ச்சகர் வெங்கடேஸ்வரன் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகி மோகன் ஆகியோர் செய்து இருந்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.