மயிலாடுதுறை, மாவட்ட கலெக்டர் – லலிதா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும் தனியார் கல்வி நிறுவன வாகனங்கள், தனியார் வேன்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் உள்ளனவா? என்று கடந்த 2 நாட்களாக வாகன சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 2 தனியார் பள்ளி பஸ்களும், 5 வேன்கள், 5 ஆட்டோக்கள் வாகனங்கள் தகுதி சான்று புதுப்பிக்காமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும், தகுதியான ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் இயக்கியது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன.
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, பள்ளி மாணவ-மாணவியர்களை அழைத்து செல்லும் போது வாகனங்கள் பர்மிட், எப்.சி., இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியன நடப்பில் தகுதியானதாக இருக்க வேண்டும்.
வாகனத்தின் அளவுக்கு மேல் அதிக நபர்களை ஏற்றக்கூடாது. குழந்தைகள் பயணம் பாதுகாப்பானது என்று உறுதி செய்ய வேண்டும். மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.