0 0
Read Time:5 Minute, 37 Second

சீர்காழி நகரசபை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க.வை சேர்ந்த 11 பேரும், அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரும், பா.ம.க.வை சேர்ந்த 2 பேரும், ம.தி.மு.க. மற்றும் , தே.மு.தி.க.வை சேர்ந்த தலா ஒரு நபரும், சுயேச்சைகள் 6 பேர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கடந்த 2-ந் தேதி நகரசபை உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

அதனை தொடர்ந்து நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் சீர்காழி நகரசபை கூட்ட அரங்கில் நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
இந்த மறைமுக தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த 11 பேரும், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும், தே.மு.தி.க.வை சேர்ந்த ஒருவரும், சுயேச்சைகள் 6 பேரும் கலந்து கொண்டனர்.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் 24-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நகரசபை உறுப்பினர் துர்கா பரமேஸ்வரி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான இப்ராஹிம், துர்கா பரமேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நகரசபை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட துர்காபரமேஸ்வரி தனது இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த நகரசபை தலைவர் பதவி தேர்தலில் ம.தி.மு.க.வை சேர்ந்த 21-வது வார்டு நகரசபை உறுப்பினர் முழுமதி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நகரசபை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட துர்கா பரமேஸ்வரிக்கு சக நகரசபை உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் நேற்று மதியம் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான இப்ராகிம் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த 11 பேரும், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இரண்டு பேரும், தே.மு.தி.க.வை சேர்ந்த ஒருவரும், ம.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரும் சுயேச்சைகள் 6 பேரும் கலந்து கொண்டனர். இதில் 18-வது வார்டு நகரசபை உறுப்பினரும் தி.மு.க. நகர கழக செயலாளருமான சுப்பராயன் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் தி.மு.க.வை சேர்ந்த 15-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சாமிநாதன் என்பவரும் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் சுப்பராயன் 21 வாக்குகளையும், சாமிநாதன் 2 வாக்குகளையும், ஒரு வாக்கு செல்லாதவையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து 21 வாக்குகளை பெற்ற சுப்பராயனை துணைத் தலைவராக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்பராயன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி, சக நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %