திருவிடைமருதூர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தலையொட்டி போலீசார்-தி.மு.க.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தியதில் ஒருவர் காயம் அடைந்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க.-4, பா.ம.க.-4, அ.தி.மு.க.-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -2, ம.தி.மு.க.-1 மற்றும் 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., பா.ம.க. இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த கட்சி கவுன்சிலர் சரவணன் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பா.ம.க. சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு போட்டியில் இருந்தார்.
இதனையொட்டி கடந்த இரண்டு நாட்களாக ஆடுதுறை பகுதியில் அனைத்து கவுன்சிலர்கள் வீட்டின் முன்பும் கடைவீதி பகுதிகளிலும், சாலை சந்திப்பு பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வஜ்ரா வாகனங்களுடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோகன், வெற்றிவேந்தன் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலையொட்டி ஆடுதுறை பேரூராட்சியில் வெற்றி பெற்றவர்களில் 12 கவுன்சிலர்கள் மட்டும் தேர்தலில் பங்கேற்பதற்காக வந்து இருந்தனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் மீனாட்சி, சுகந்தி, மாலதி ஆகிய 3 கவுன்சிலர்களும் ேதர்தலில் பங்கேற்க வரவில்லை. இவர்களில் சுகந்தி, மாலதி ஆகிய 2 கவுன்சிலர்களும் மாயமாகி விட்டனர்.
இதற்கு எதிர்தரப்பினர் தான் காரணம் எனக்கூறி கவுன்சிலர்கள் இளங்கோவன்(தி.மு.க.), சரவணன்(ம.தி.மு.க.), ஷமிம்நிசா, கண்ணன்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் பேரூராட்சி அலுவலக வாசற்படியில் தரையில் அமர்ந்து தலைவர் தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நேரத்தில் பா.ம.க. கவுன்சிலர் ம.க.ஸ்டாலின் உள்பட அந்த கட்சி உறுப்பினர்கள் 4 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், பா.ம.க. ஆதரவு சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேரும் என மொத்தம் 8 கவுன்சிலர்கள் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தேர்தலில் பங்கேற்பதற்காக வந்து இருந்தனர்.
அங்கு வந்த அவர்கள், தேவையான மெஜாரிட்டி கவுன்சிலர்கள் உள்ளதால் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி அவர்கள் 8 பேரும் பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே காத்து இருந்தனர். ஆனாலும் தேர்தல் நடத்தப்படாமல் காலதாமதம் ஆனதால் பரபரப்பு நிலவியது.
பா.ம.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் ஒரு பகுதியிலும், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றொரு பகுதியிலும் கூடியதால் அந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கூடியிருந்த பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். அப்போது கூட்டத்தினர் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தலைவர் தேர்தல் நடத்தப்போவதாக பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன் அறிவித்து அதற்கான வேட்புமனு படிவத்தை பா.ம.க.வினரிடம் வழங்க முயற்சித்தார்.
அப்போது தேர்தலை நடத்தக்கூடாது எனக்கூறி தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களை தி.மு.க.வினர் பிடுங்கி கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மதியம் 1 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான இளவரசன், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனை யடுத்து அலுவலக வாசலில் அமர்ந்து தேர்தலை நிறுத்த வலியுறுத்திய தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் 4 பேரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் பா.ம.க. மற்றும் அவர்களது ஆதரவு கவுன்சிலர்கள் 8 பேரும் தொடர்ந்து தேர்தலை நடத்த வலியுறுத்தி அலுவலகத்தின் உள்ளே காத்திருந்தனர்.