கோவை, காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலணி பகுதியை சேர்ந்த ஜோஸ்லின் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார்.
உக்ரைனில் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் போலந்து நாட்டினை அடைந்து அங்கிருந்து இந்திய தூதரகம் மூலம் டெல்லி வந்த ஜோஸ்லின், நேற்று நள்ளிரவு வீடு திரும்பினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் விமான சேவை கிடைக்காமல் உக்ரைனில் தவித்து வருவதாகக் கூறினார். தமிழ் பேசும் மாணவர்களை அதிகாரிகள் காக்க வைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், போரின் பத்தாவது நாளான இன்று, உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும், தற்காலிகமாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக ரஷ்யா அதிபர் மாளிகை அறிவித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
உக்ரனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.