0 0
Read Time:4 Minute, 3 Second

உக்ரைன் – ரஷ்யா இடையே 12வது நாளாக போர் நடைபெறுகிறது. இதற்கிடையில், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய உக்ரைன் பகுதியில் உள்ள வினிட்ஸ்யாவின் விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி முற்றிலுமாக அழித்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என நேட்டோவிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே உக்ரைனின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 2 ராணுவ வாகனங்களிலிருந்து அடுத்தடுத்து வெளியேறும் குண்டுகள் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

உக்ரைன் – ரஷ்யா போரின் காரணமாக இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் செல்லும் பேருந்துகள் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி வெளியாகியுள்ளது.

பொதுமக்களை வெளியேற்ற தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தாததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மரியுபோலில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் சென்ற பேருந்துகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், போர் எதிர்ப்பாளர்கள் சிலர் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய போலீசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அரசுக்கு எதிராக அனுமதியின்றி அமைப்பேரணி நடத்திய போர் எதிர்ப்பாளர்கள், அங்கிருந்த ரஷ்ய போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %