0 0
Read Time:8 Minute, 3 Second

சென்னை: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்திய விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதிமுக, பாஜ படுதோல்வியை சந்தித்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 2ம் தேதி பதவி ஏற்று கொண்டனர். தொடர்ந்து 4ம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது.

இதில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மற்றும் துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக பதவியும் ஏற்று கொண்டனர். ஆனால், ஒரு சில இடங்களில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றனர். இந்த நிலையில் மறைமுகத்தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. கட்சி கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ, அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

திமுக தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள். திமுகவின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகி விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருந்தார். அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனை அதிரடியாக நீக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பனையும் நீக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக தேர்தல் நடந்தது. இதில் மேயர் பதவிக்கு 20வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் சுந்தரி ராஜா போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.

அவரை எதிர்த்து 2வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கீதா குணசேகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். மேயர் தேர்தலுக்கு முன்பாக அங்கு பல்வேறு பிரச்னைகள் நடந்தது. தொடர்ந்து அங்கு மறைமுக தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில் 32 வாக்குகள் பதிவானது. இதில் சுந்தரி ராஜா 20 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கீதா குணசேகரன் 12 வாக்குகள் பெற்றார். திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட கீதா குணசேகரன் எம்எல்ஏ அய்யப்பன் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்தே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • கட்சி கட்டுப்பாட்டை மீறிய திமுக நிர்வாகிகள் 7 பேர் நீக்கம்
    கட்சி கட்டுப்பாட்டை மீறிய திமுக நகர, ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மதுரை தெற்கு மாவட்டம், திருமங்கலம் நகர திமுக பொறுப்பாளர் சி.முருகன், உசிலம்பட்டி நகர திமுக செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் இ.சுதந்திரம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சோலை எம்.ரவிக்குமார், உசிலம்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் மொ.சந்திரன்-வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகர திமுக செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் மற்றும் எஸ்.எம்.ஷபீர் அகமத் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  • திமுக பெண் நிர்வாகி நீக்கம்
    திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %