கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் ராசாகுப்பம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. இதில் மானியம் பெற்ற விவசாயிகள் தங்கள் கரும்பு வயலில் மண்ணின் மேற்பரப்பில் இருந்து ½ அடி ஆழத்தில் சொட்டுநீர் பாசன குழாய்களை அமைத்துள்ளனர்.
இதனை வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது , பிற பயிர்களை காட்டிலும் கரும்பு பயிருக்கு தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்கி வருகிறது என்றனர்.
அப்போது வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், வேளாண்மை அலுவலர் அனுசுயா, உதவி வேளாண்மை அலுவலர் ஆரோக்கியதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.